19 பெப்ரவரி 2015
பேராசிரியர். இராசகுமாரன்:-
ஜ.நா விசாரணை அறிக்கையினை உடனடியாக வெளியிடக்கோரி திட்டமிட்டபடி எதிர்வரும் 24ம் திகதி தமது போராட்டம் முன்னெடுக்கப்படும் என யாழ்.பல்கலைக்கழக சமூகம் அறிவித்துள்ளது. தமது போராட்டத்திற்கு குடாநாட்டின் ஒட்டுமொத்த சமூகமும் ஆதரவளிக்க முன்வந்துள்ளதாக பல்கலைக்கழக ஆசிரிய சங்க தலைவர் பேராசிரியர்.இராசகுமாரன் தெரிவித்துள்ளார்.
இன்று காலை குடாநாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் சிவில் சமூக அமைப்புக்கள் உள்ளிட்ட தரப்புக்கள் பல்கலைக்கழக நூலகத்தில் சந்திப்பொன்றை நடத்தியிருந்தன.அவ்வேளை பல்கலைக்கழக சமூகம் முன்னெடுக்கும் போராட்டங்களிற்கான தமது முழுமையான ஆதரவை சிவில் சமூகம் உள்ளிட்ட தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
அன்றைய தினம் காலை யாழ்.பல்கலைக்கழக முன்றலில் புறப்படும் பேரணி பலாலி வீதியினூடாக அம்மன் வீதியை சென்றடைந்து பின்னர் அங்கிருந்து நல்லூர் கோவில் முன்றலை சென்றடையுமென ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
அங்கு வைத்து தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர்களை ஜ.நா வதிவிடப்பதிவாளரிடம் கையளிக்க திட்டமிட்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதனிடையெ 2012ம் ஆண்டில் பல்கலைக்கழக மாணவர்களால் நடத்தப்பட்ட போராட்டம் மற்றும் அதன் மீதான அரசபடைகளது வன்முறைகளினால் முடங்கிப்போயிருந்த மாணவ சமூகம் இப்போராட்டத்தில் இணைந்து கொள்ள முழு அளவில் முன்வந்துள்ளது.
பல்கலைக்கழகத்தின் அனைத்து பீட மாணவ ஒன்றியங்களும் அதே போன்று கல்வி சார்,சார அமைப்புக்களும் நீண்ட இடைவெளியின் பின்னர் இணைந்து இப்போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment